http://pitchaipathiram.blogspot.com/2006_03_01_archive.html

திங்கள், நவம்பர் 24, 2008 | 0 Comments

புதியபார்வை 16-28, 2006 இதழில் 'மழைக்கால மரணங்கள்' என்றொரு சிறுகதை தமயந்தி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த சிறுகதையாக இதைக் குறிப்பிடுவேன். தமயந்தியின் சில சிறுகதைகளையும் கவிதைகளையும் ஏற்கெனவே படித்திருக்கிறேன். கவிதையும் உரைநடையும் மிக அழகாக இந்தப் படைப்பில் கைகோர்த்திருக்கிறது. ஆனானப்பட்ட வைரமுத்துவே இந்த விஷயத்தில் தடுமாறியிருக்கிறார் என்பதை அவரது ஆரம்ப கால நாவல்களை படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.'எனது மரணம் ஒரு மழைக்காலத்தில் நிகழக்கூடாது....' என்று ஆரம்பிக்கும் இந்தச் சிறுகதை கவிதையின் இயல்பான வாசனையோடு நகர்கிறது. .... மழையடிக்கும் போது வீட்டு வாசல்களில் விரிக்கப்பட்டிருக்கும் குடைகள் நீர் வடிந்தபடியே இருப்பதைப் பார்த்திருக்கிறேன் என்பதால் என் மரணத்திற்கு வரக்கூடிய சுமார் முந்நூறுலிருந்து ஐநூறு நபர்கள் எங்கள் வீட்டு வாசலில் விரிக்கும் குடைகள் எனக்காக அழும்....." போன்ற வரிகளிலிருந்து இதை உணரலாம். சிறுகதையின் கடைசி வரி, 'மழை எனக்குப் பிடித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை' என்று வாசகனுக்கு சிறிய ஆச்சரியத்தை தருவதோடு முடிகிறது.சாவகாசமான நேரம் கிடைக்கும் போது முழுக்கதையையும் உள்ளிட முயற்சிக்கிறேன்.

About