ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும். என்ன செய்யலாம்? நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம் என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…
சரி பதிப்பகத்தின் பெயர்? நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த், சொக்கலிங்கம், முருகேஷ் - ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது - துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.
‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ… காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’

ஆ... புத்தகம்
அடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான். யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி!’
தன் மௌஸே தனக்குதவி - நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)
எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா?’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’
அருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம்? எத்தனை பக்கம்? பேப்பர் என்ன வேணும்? அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம்? சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.
சுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத) முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக ஆரம்பித்தன.
வெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா? அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள்? பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்?

அழைப்பிதழ்
அதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா, அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)
விழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம். வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது

About