வெளி

புதன், மார்ச் 25, 2009 | 0 Comments

வாழ்க்கை : ரயில் பயணங்களில் வாங்கின முறுக்குக்கான சில்லறையை வாங்க ரயிலைத் துரத்தும் வியாபாரி போலத் தான் வாழ்க்கை எனக்கு முகம் காட்டுகிறது.ரயில் வேகம் அதிகமானால் நஷ்டமும், கை நீட்டப்படும் சில்லறையை பெற முடிந்தால் லாபமுமாக வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. சில நேரம் தவறி தண்டவாளங்களில் சிதறும் சில்லறைகளைத் தேடுவதிலும் கழிகிறது வாழ்க்கை. ஒரு அழிரப்பர் கொண்டு என் வாழ்வை முதலிலிருந்து அழித்து எழுத ஆசை.எது எப்படி என்றாலும் என்னை உருவாக்கிய அப்பா‍ தூக்கததில் கால் வலித்தால் விழித்து கால் பிடித்து விட்ட அப்பா, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடினப் போது சைக்கிளில் வைத்து கூட்டிட்டுப் போன அப்பா.எனக்கு பாட்டனி பரீட்சை என்றால் ராததிரி பூராவும் நோட்ஸ் எழுதிக் கொடுத்த அப்பா அப்பவும் வேணும்.
நண்பர்கள்:
எல்லா கால‌க‌ட்ட‌ங்க‌ளிலும் ந‌ல்ல‌ ந‌ட்பே என்னை உருவாக்கியிருக்கிற‌து. க‌ல்லூரில‌ ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌த்துல் "மாறுத‌லா"ங்கிற‌ கையெழுத்துப் ப‌த்திரிக்கையை நான் அமுதா,கோம‌தி,சிவ‌ப்ப்ரியானலாம் ந‌ட‌த்தினோம். அப்ப‌ தான் சாவிக்கு ‍ பொழுது விடியுமென்று எஙிற‌ க‌தையை அனுப்பிய‌து. அது திரும்பி வ‌ந்தாலும்‍ ந‌ல்லா எழுதுறேங்கிற க‌டித‌த்தை இணைச்சி நான் நிறைய‌ எழுத‌ ப‌யிற்சி கொடுத்த‌ ச‌த்தீஷ் அண்ணா. ந‌ல்ல‌ க‌தைக‌ள் இவைன்னு அடையாள‌ம் காட்டிய‌ ஷ‌க்தி தொட‌ர் ஜெக‌ன்.ஒவ்வொரு தொகுப்புக்கும் முன்னுரை கொடுத்த‌ பிர‌ப‌ஞ்ச‌ன். ஒவ்வொரு எழுத்திலும் துணை நின்ற‌ மால‌ன்.இர‌வின் வான‌த்தில் ஒவ்வொரு திக்கும் மிளிரும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளுக்குப் பேர் இருக்கிற‌தோ‍ இல்லையோ என் வீட்டுக்கு மேல் ஒளிரும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளின் பெய‌ர் இருக்கும்.உற்றுப் பாருங்க‌ள்.
தனிமை
மின்விசிறி ஓடும் ஓசை பிரம்மாண்டமாய் கேட்டிருக்கிறதா உங்களுக்கு? தாள் தரையில் விழும் ஒலி உங்கள் காத்களை மூட வைத்திருக்கிறதா? தனிமை ஒரு பாம்பின் இருப்பு போல என்னை பல தருணங்களில் மிரட்சி அடைய வைத்திருக்கிறது.மனிதர்கள் சுமக்கும் வலி மிகுந்த சிலுவை‍ தனிமையாக மட்டுமே இரூக்கும் என்று வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.ஒற்றை தேனீர் கோப்பை எந்த மாலைவேளையையும் அழகாக்கப் போவதில்லை.கடந்து போகும் மரங்கள்,காற்று மட்டுமே மிச்சமிருக்கும் பேருந்து பயணங்களைக் கூட அழகாக்குது பக்கத்து இருக்கை குழந்தை.
புத்தகங்கள் :
அம்புலிமாமாவில் ஆரம்பித்த பயணம் . பாலகுமாரன் வண்ணதாசன், எமிலி டிக்கின்சன்,வண்ணநிலவன்,அசோகமித்திரன்,எஸ்.ரா வரை இன்னும் ஒரு முடிவு பெறாத சாலையின் இருப்பாய் நீள்கிறது.வெகுஜ‌ன‌ ப‌த்திரிக்கைக‌ளில் எழுதுவ‌தை விம‌ர்சிக்கும் இல‌க்கிய‌வாதிக‌ளைப் ப‌ரிதாப‌த்தோடு பார்க்க‌வும், இல‌க்கிய‌ அர‌சிய‌லில் இருந்து வில‌கி இருக்க‌வும் சொல்லிக் கொடுத்த‌தும் ,ந‌ல்ல‌ எழுத்துக்க‌ள் எங்கிருந்தாலும் தாக‌முடைய‌வ‌ன் த‌ண்ணீரை மொட‌க் மொட‌க்கென்று குடிப்ப‌து போல் கிர‌கித்துக் கொள்ள‌வும், வாழ்க்கையில் அனுப‌வ‌ங்க‌ளைத் த‌விர‌ உண்மையான ஆசான் வேறேதுவும் இல்லை என்று உணர்ந்து கொள்ளவும் புத்தகங்களே இன்னும் உதவி செய்கின்றன . நெல்லை நகரத்து கீழ ரத வீதில பேலபூரி சாப்பிட்டு கைத்துடைக்கும் தாளில் கூட யாரோவின் வாழ்க்கை கசக்கபடலாம்,இல்லையா?
காத்திருப்பு:
வாழ்க்கை ந‌ம்மை எதெற்கெல்லாமோ காத்திருக்க‌ வைக்கிற‌து. பேருந்து நிலைய‌த்தில், பிர‌ச‌வ‌ அறையில்,ப‌ரீட்சை முடிவுக்காய், காத‌லியின் ப‌திலுக்காய்.. இன்னும் எத்த‌னை எத்த‌னையோ.. காத்திருத‌ல்க‌ள் எல்லாமே தேடுத‌ல்க‌ளா ? இருக்க‌லாம். இல்லாம‌லும் போக‌லாம்.க‌ட‌வுளின் வ‌ருகைக்காக‌ த‌வ‌ம் ப‌ண்ணினார்க‌ள் முனிவ‌ர்க‌ள் என்ற‌ க‌தை கேட்டு வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ள் நாம். இழ‌ப்புக‌ளைப் புன்ன‌கையாய் மாற்றும் யுக்தியை என‌க்கு சொல்லிக் கொடுத்த‌து தேட‌ல் தான். தேட‌ல் ந‌ம்பிக்கைக‌ளோடே பெரும்பாலும் இருந்தாலும் ,காத்திருப்புக‌ள் தேட‌லா என்று தெரிய‌ல‌னாலும் காத்திருப்புகளில் எப்பவும் மிச்சமிருக்கிறது தவற விட்ட கடைசி பேருந்தின் தடம்.
இசை :அப்பாவின் கிடார் இசையோடு வளர்ந்தவள் நான்.பாட்டுப் போட்டியின் முதல் நாள் குட்டு வாங்கி வாங்கி பாட்டு படிச்சிட்டுப் போய் பரிசெல்லாம் பள்ளிக்கூட நாட்களில் வாங்கிட்டு வந்ததுண்டு. அப்புறமா இலங்கை வானொலி கேக்கனே ஒரு ட்ரான்சிஸ்டர் அப்பா வாங்கிக் கொடுத்தார்‍‍‍= ஏழாவது வகுப்புல. படிக்கிறப்போலருந்து குளிக்கிறப்போ கூட அதை கங்காரு மாதிரி சுமந்துட்டு திரிஞ்சிருக்கேன்.25 பைசாவுக்கு பாட்டுப் புத்தகம் வாங்கி வச்சிக்கிட்டு வீட்ல யாரும் இல்லாதப்போ சத்தமா பாடிருக்கேன்.(பக்கத்து வீட்டுக்காரங்க பாவம்னு இப்ப புரியுது.)ராஜாவோட ப்ளோ‍அப் ஒண்ண என் அறைல மாட்டி வச்சிக்கிட்டு ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் தெ வின்ட் பத்திலாம் பேசிருக்கேன். மனசுக்கு நெருக்கமா பல பாடல்கள் இருக்கு. சிலது கண்ணுல நீர கொண்டு வரும்.ஸ்வரங்கள்ல இருக்கிற மாதிரி இசை இதயத்துலயம் இருக்கு இலலையா

About