மூன்றாவது குறும்படம் - 'கழுவேற்றம்!'ராஜா என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் எழுத்தாளர் தமயந்தியின் சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.இளைய மகன் வீட்டில் தங்கியிருக்கும் தாய் அங்கே மருமகளின் நொச்சு தாங்க முடியாமல் தவிக்கிறாள். மனைவி கணவனிடம் அவனுடைய அம்மாவை எங்கேயாவது கொண்டு போய்விட்டுவிட்டு வரும்படி சொல்கிறாள். இல்லாவிட்டால் தான் தனது அம்மா வீட்டுக்குப் போய்விடுவேன் என்று மிரட்டுகிறாள்.இளைய மகன் சென்னையிலிருந்து மதுரையில் இருக்கும் தனது அண்ணனின் வீட்டிற்கு அம்மாவை அழைத்து வருகிறான். அங்கே அண்ணனின் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருப்பதாகத் தெரிகிறது.பக்கத்து வீட்டுப் பையன் உதவியால் அண்ணனுக்கு போன் செய்து பேசுகிறான் தம்பி.. “இங்க எதுக்கு 'அதை' கூட்டிட்டு வந்த..? நான் வைச்சுக்க முடியாது..? எங்கிட்டாச்சும் கொண்டு போ..?” என்று எரிந்து விழுகிறான் அண்ணன்.. ஆசையாகப் பேசும் அம்மாவிடமும் இதையே சொல்லி பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்கிறான் மூத்தப் பிள்ளை. தொடர்ந்து இவர்கள் முயல, போன் சுவிட்ச் ஆஃப்.இப்போது இளைய மகனும், அம்மாவும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கிறார்கள். இரவாகிவிட்டது. பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்கிறது. அம்மா "பசிக்குதுப்பா" என்கிறாள் மகனிடம். "நான் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுச் செல்லும் இளைய மகன், அம்மாவை அப்படியே 'அம்போ' என்று விட்டுவிட்டு, பஸ் ஏறி சென்னை நோக்கி போகிறான்.இங்கே அம்மா காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. நேரங்கள் கடக்க.. அவளுக்கு புரிந்துவிட்டது.. எழுந்து வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்தபடியே நடக்கத் துவங்குகிறாள் என்பதோடு இந்தக் குறுங்காவியம் நிறைவடைந்தது.இந்தப் படத்தில் அந்த அம்மா பல்வேறு கோணங்களில் அமர்ந்திருப்பதோடு படத்தினை நிறைவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ஆனாலும் பரவாயில்லை.. நிறைவாகவே செய்திருக்கிறார் இயக்குநர் ராஜா. பாராட்டுக்கள்..ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்தில் சொல்லும் நீதியைவிட, வெறும் ஐந்தே நிமிடத்தில் நறுக்கென்று சொல்லி முடித்த இந்த குறும்படத்திற்கு பலமே இதனுடைய உயிரோட்டமான கதைதான்..! .இது போன்ற குறும்படங்களை மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று 'குறும்பட வட்டம்' என்கிற பெயரில் கூட்டம் நடத்தி திரையிட்டு வருகிறது 'தமிழ்ஸ்டூடியோ.காம்'.மாதம் 50 ரூபாய் கட்டணம் என்கிற சிறு தொகை அன்பளிப்புடன் இந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் இதன் இயக்குநர்கள். கூடவே இலக்கியக் கூட்டம் என்கிற தலைப்பிலும் மாதாமாதம் யாராவது ஒரு இலக்கிய ஆர்வலரை பேச வைக்கிறார்கள். இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக 'ஈ', 'அஞ்சாதே', 'வெண்ணிலா கபடிக்குழு', 'சிவா மனசுல சக்தி', 'நந்தலாலா' போன்ற படங்களில் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜீனியராகப் பணியாற்றிய திரு.உதயகுமார் என்பவருடன் நேர்காணல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.திரு.உதயகுமார் திரைப்படங்களில் சவுண்ட் மிக்ஸிங் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மிகச் சிறப்பாக பதிலளித்தார். "வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தில் ஸ்பாட் ரெக்கார்டிங்தானாம்.. நல்ல முறையில் வந்திருக்கிறது..” என்றார். "அஞ்சாதே' திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் தனக்குக் கொடுத்த சுதந்திரத்தினால்தான் சிறப்பான முறையில் செய்ய முடிந்தது..” என்றார். "வரவிருக்கும் 'நந்தலாலா' திரைப்படத்தில்கூட கிளைமாக்ஸ் காட்சியான கடைசி 45 நிமிடங்களில், பின்னணி இசையே இல்லாமல் படத்தில் பல உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் நடப்பதுபோல் திரைப்படம் அமைந்திருக்கிறது" என்றார். 'நந்தலாலா' பற்றி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு தமிழ்ச் சினிமா உலகில் பரவியிருக்கிறது. பார்ப்போம்.

About