வடக்கு வாசல் http://www.vadakkuvaasal.com

ஞாயிறு, மார்ச் 22, 2009 | 0 Comments

இந்திக்குத் தமிழ் வழங்கும் நூறு சிறுகதைகள்
மதிப்புரை
இந்திக்குத் தமிழ் வழங்கும் நூறு சிறுகதைகள்
முனைவர் எச்.பாலசுப்பிரமணியம்
பீஸ்வீன் சதாப்தி கீ தமிழ் கஹானி
(இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்)
மொழியாக்கம் : முனைவர் வெ.பத்மாவதி
வெளியீடு : நவயுக பாரதி,
36/1, 14_வது குறுக்குத் தெரு,
திருமகள் நகர், பீளமேடு புதூர், கோவை_641 004.
விலை முறையே : ரூ. 120/_; 120/_; 130/_; 100-/_; 110/_

பொறிஇயல், தொழில் நுட்பம், நூற்பாலைகள், உயர்கல்வி, ஆன்மீகம் என்று பல திறப்பட்ட துறைகளில் முன்னேற்றம் கண்டு முன்னோடியாக விளங்கும் கோவை நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், மொழியாக்கத் துறையில் முனைந்து தரமான நூறு தமிழ்ச் சிறுகதைகளை ஐந்து தொகுதிகளிலாக இந்திக்குக் கொணர்ந்துள்ள முனைவர் வெ.பத்மாவதி உள்ளபடியே சாதனை புரிந்துள்ளார். மானவாரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்த நூறு கதைகளல்ல இவை; தமக்குப் பிடித்தமான ஒரு சில எழுத்தாளர்களின் பல கதைகளுமல்ல.
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளிலிருந்து தொடங்கி நீள நெடுகப் பயணித்து, இரண்டாயிரம் வரை வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகளிலிருந்து, திறனய்வு நோக்குடன் துல்லியமாகத் தேர்ந்தெடுத்த நூறு கதைகள். ஐந்து தனித்தனித் தொகுதிகளாக நூறு தமிழ்க் கதாசிரியர்களை இவர் ஒருசேர இந்திக்கு அறிமுகப் படுத்தியுள்ளது இதுவரையிலும் வரலாறு காணாத சாதனை. இருபதுகளின் பாரதியார், வ.வே.சு.அய்யர், அ.மாதவையா தொடங்கி இரண்டாயிரமாம் ஆண்டின் விழி.பா.இதய வேந்தன், லெட்சுமணப்பெருமாள், ர.நடராசன் வரையிலும் மூன்று தலைமுறைகளைச் சார்ந்த நூறு சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் வாயிலாக இதன் மூலம் இந்தி உலகுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
ஓர் இலக்கியப் பிரதி இணைப்பு மொழியான இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு விட்டால், அதனை பிற இந்திய மொழிகளுக்கு எளிதாகக் கொண்டு செல்ல இயலும். பழக்க _ வழக்கங்கள், பண்டிகை _ திருவிழாக்கள், பூஜை _ புனஸ்காரங்கள், நாட்டார் கதை _ பழமொழிகள், நம்பிக்கை _ விலக்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் இந்திய மொழிகளிடையே பரவலான ஒற்றுமைகள் இருந்து வருவதால் பரஸ்பரப் பரிமாற்றம் சேதாரமின்றிச் செவ்வையாக நடைபெற இயலும். ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்டு இந்தியமொழிப் பிரதிகளை மொழி பெயர்க்கும்' அன்பர்கள் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கும் போது இந்திய மொழிகளிடையே நேரடி மொழியாக்கம் செய்பவர்கள் பீடுநடை போடக் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்ப் பத்திரிகைகளில் மராத்தி, இந்தி, வங்காள மொழிகளிலிருந்து நயமான பல சிறுகதைகளும் புதினங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரமாயின; சில நூல் வடிவிலும் வெளி வந்தன. இவை அனைத்துமே நேரடி மொழியாக்கம் என்பது இதன் சிறப்பு அம்சம் த.நா.குமாரசாமி, கா.., ரா.விழி.நாதன் போன்ற தரமான மொழியாக்கச் செம்மல்களின் கைவண்ணத்தால், தாகூரும், காண்டேகரும், பிரேம் சந்தும் தமிழக வீதிகளில் உலாவந்தனர்; இல்லங்களில் உரையாடினர். தமிழிலிருந்தும் ஒரு சில படைப்புகள் பிற மொழிகளுக்குச் சென்றன. தமிழகத்தில் மட்டுமல்ல நாடெங்கிலுமுள்ள பல்வேறு மொழிகளிடையே சுமுகமான இலக்கியப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்தது. யார் செய்த தீவினையோ, மொழிவாரி மாநிலங்களின் அமைப்புக்குப் பின்னர், நாமனைவருமே சன்னல்களையும் கதவுகளையும் பிறமொழி வாடை நுழையாதபடி இழுத்துச் சார்த்திக் கொண்டோம். பரஸ்பர உறவுக்கும், நல்லெண்ணத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வெறுப்பும் பகையும் சந்தேகப் பார்வையும் வலுக்கலாயிற்று. இந்திய மக்கள் என்ற உணர்வு போய் மொழி வழியாகப் பிரிந்து நின்றோம்.
மொழிகளிடையே போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற மைய அரசு நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயலாற்றிய போதிலும், அவை வெளியிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் உரிய வாசகர்களைச் சென்றடைய வழிவகை செய்யப் படவில்லை. விமர்சகமோ, மொழியாக்கத்தை இரண்டாம் தரப்படைப்பு என்று நினைத்தோ, அன்றி வேறெந்தக் காரணத்தினலோ இவற்றைக் கண்டு கொள்ள வில்லை. எழுத்தாளர்கள் தங்கள் மொழிவட்டத்திலேயே வளைய வந்தனர். பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது. இலக்கியத்தின் புதிய செல்நெறிகளை பிறமொழி எழுத்தாளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
தாராள மயங்கிளினலோ, கணினி _ மின்னஞ்சல்கள் செய்யும் நவீன விந்தையினலோ அன்றி யார் செய்த தவத்தினலோ சாளரங்கள் தாமாகவே திறந்து கொண்டன. இலக்கிய உலகில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மொழிக் குரல்கள் இப்போது அந்நியமாகத் தெரிவதில்லை. தமிழகத்தில் மொழியாக்கத்துக்கெனவே வெளிவரும் காலாண்டிதழ் திசை எட்டும்' எட்டுத் திக்கிலிருந்தும் கலைச் செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நெய்வேலி அருகே குறிஞ்சிப்பாடியிலிருந்து வருகிறது இந்த இதழ். வடக்கு வாசல் இதழிலும் பல சிறந்த மொழி பெயர்ப்பு சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த பின்னர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் செவ்வியல் தமிழினைப் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளது. பிறமொழி வல்லுநர்களின் ஆலோசனை உடன் சங்க இலக்கியங் களையும் பிற நல்ல படைப்புகளையும் இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டின் தரம் மிக்கச் சிறுகதைகளை இந்தியில் அறிமுகப் படுத்தும் பொறுப்பினை முனைவர் வெ.பத்மாவதி ஏற்றுக் கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிப் பாதையில் பயணித்து, கதைகளின் பொமைச் சிறப்புகளின் அடிப்படையில் ஐந்து காலகட்டங்களாகப் பகுத்து, ஒவ்வொரு காலகட்டத்தின் செல் நெறிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இருபது கதாசிரியர்களையும் அவர்களின் ஒவ்வொரு படைப்பையும் தேர்ந்தெடுப்பதில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.அரசு துணை புரிந்துள்ளார்.
முதற்கால கட்டம் (1930_1950) ஐரோப்பியச் சிறுகதைகளைத் தழுவியும், சமஸ்கிருத மரபு மற்றும் புராணங்களிலிருந்து கதைக் கருவை உள்வாங்கியும் புனையப்பட்ட கதைகள். ஒருபுறம் ஜனரஞ்சகப் போக்கு மேலோங்கி நிற்க, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, வ.ரா. போன்றவர்கள் புதிய பாதையை வகுத்தனர்.
இரண்டாம் காலகட்டம் (1950_65) இடது சாரிக் கருத்துகளின் தாக்கம் கொண்ட சிறுகதைகள் அரங்கேறின. இந்தப் பின்னணியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோவியத் யூனியன் மற்றும் சீனத்திலிருந்து தோன்றி ஆசியாவெங்கிலும் பரவிய சிந்தனைகள் தமிழ்ச் சிறுகதையிலும் பிரதிபலித்தன. பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் மனப்பாங்குகளைச் சித்தரிப்பதிலும் புதிய உத்திகள் கையாளப்பட்டன. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி ஆகியோர் இக்காலத்தில் சிறுகதையுலகில் தடம் பதித்தனர்.
மூன்றாம் காலகட்டம் (1965_1980) சிறுகதையின் களம் நகரங்களிலிருந்து கிராமப் புறங்களுக்கு மாறியது. கிராம வாழ்க்கையின் சித்தரிப்புக்கு ஏற்ப, மொழிநடையிலும் மாற்றம் ஏற்பட்டது. இலக்கிய நடைக்குப் பதிலாக பேச்சு வழக்குகள் அப்படியே பதிவாயின. இக்கால கட்டத்தின் முக்கியமான படைப்பாளிகள் ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விடுவித்து, சிற்றிதழ்களிலேயே தமது படைப்புகளை வெளியிட்டனர். நனவோடை உத்திகளுடன் பெண்ணியக் குரலும் பதிவானது. அம்பை, நாஞ்சில் நாடன், வண்ண நிலவன், மேலாண்மை பொன்னுசாமி முக்கியமான படைப்பாளிகள்.
நான்காம் கட்டம் (1980_1990) இலத்தீன் அமெரிக்காவின் கொரில்லாப் போர், ஆப்பிரிக்க மக்களின் கருப்பர் இலக்கியம் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டம் ஆகியவற்றின் தாக்கத்தைக் காண்கிறோம். முந்தைய கால கட்டங்களில் ஏதேனும் ஒரு சிந்தனையோட்டம் அடித்தளமாக இருந்தது. அதற்கு மாறாக, இக்கால கட்டத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் அவரவருக்கான தனித்தன்மையை வகுத்துக் கொள்வதில் முனைப்பாகச் செயல்பட்டனர். பெண்ணியத்துடன் தலித்தியக் கதைகளும் முக்கியத்துவம் பெற்றன. சோ.தருமன், திலீப் குமார், தமிழ்ச் செல்வன், களந்தை பீர் முகமது, காவேரி ஆகிய எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம்.
ஐந்தாம் கட்டம் (1990_2000) சமூகத்தில் நசுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் தலித்தியம், பெண்ணியம் சார்ந்த கதைகள் மேலொங்கின. சோவியத் யூனியன் பிளவுண்டதைக் கண்ட மிரட்சி எழுத்தாளர்களின் பலதரப்பட்ட எதிர் வினைகளை விளைவித்தது. சோஷலிஸத் திலிருந்து மோக பங்கம் ஏற்பட்ட போதிலும் பன்னட்டு முதலாளியத்தை அடிப்படையாகக் கொண்ட உலக மயமாதலை ஏற்க முடியாத மனநிலை. வகுப்பு வாதத்தின் விஷமம் மற்றொரு புறம். ம.இராஜேந்திரன், தோப்பில் முகமது மீரான், தமயந்தி, இரா.முருகன், ப.வா.செல்லதுரை, உமாமகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத் தகுந்த படைப் பாளிகள்.
ஐந்து தொகுதிகளிலும் தொடராக இணைந்துள்ள வளர்ச்சிக் கட்டங்கள் மூலமாக பிறமொழி அறிஞர்கள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை ஒட்டு மொத்தமாக அறிந்து கொள்ள இயலும். இது தவிர, இந்தியச் சிறுகதை வளர்ச்சியுடன் தமிழ்க் கதைகளின் போக்குகளை ஒப்பிட்டு இந்தி பிரசாரசபா முதுகலைப் பட்டப்படிப்பு பேராசிரியை டாக்டர் நிர்மலா எஸ்.மௌரியா ஐந்து தொகுதிகளிலும் முன்னுரை வழங்கியுள்ளது பயனுள்ளதாகத் தெரிகிறது.
இத்தனை கதைகளையும் மொழியாக்கம் செய்ததுடன் நில்லாமல், வெ.பத்மாவதி ஒவ்வொரு தொகுதியிலும் வெளிவந்த கதைகளின் சிறப்பு அம்சங்களைச் சுருக்கமாத் தொகுத்தளித்துள்ளது பாராட்டிற்குரியது. அத்துடன் அவர் தமிழ் எழுத்தாளர் பற்றிய சுருக்கக் குறிப்புகளையும் இணைத்திருந்தால் அது பிறமொழியினருக்கு மேலும் பயன் தருவதாக அமைந்திருக்கும். இதை மட்டுமே ஒரு குறை போல எடுத்துக் கூறத்தோன்றுகிறது. மற்றப்படி அட்டைப்பட வடிவமைப்பு முதல் கட்டமைப்பு, உள்ளடக்கம் எல்லாமே சிறப்பாக உள்ளன. கலை வண்ணம் மிகுந்த அட்டைப்பட வடிவமைப்பு கூட பத்மாவதியின் கைவண்ணம் தான். அதற்காக தனியான பாராட்டுகள்!
இந்திய அரசின் பொதுத்துறையிலும் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் பணியாற்றி இந்தி மொழியின் நடை வேறுபாடுகளை நன்குணர்ந்த பயிற்சி இந்த மொழியாக்கப் படைப்பெங்கிலும் பிரதிபலிக்கிறது. உள்ளபடியே இந்த ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் இந்திக்கு செவ்வியல் தமிழின் அன்பளிப்பு.
manibharati@yahoo.com
முனைவர் எச்.பாலசுப்பிரமணிய

About